விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றில் இருந்து பார்க்கப்பட்டது குறித்து நேச்சர் ஆய்விதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இது நியூட்ரான் நட்சத்திரங்களின் ஒன்றாக இணைவதால் வெளியாவதா? அல்லது வேற்றுக்கிரக வாசிகளின் வாகனத்தில் இருந்து வெளியாகும் சமிக்ஞையா? உண்மையில் இந்த சமிக்ஞை என்னவாக இருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே ஐந்துவிதமான கோட்பாடுகள் நிலவுகின்றன.

விண்வெளியில் இருந்து வெளியாகும் ஒரு அரியவகை ரேடியோ சிக்னலுக்கு ‘ரேடியோ வேக அதிர்வுகள்’ (Fast Radio Bursts) என்று பெயரிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். இந்த அதிர்வு மில்லி செகண்ட் மட்டுமே தோன்றும் பிரகாசமான ஒளி அலை. இந்த அதிர்வுகளை சக்திவாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலமே காண முடியும்.

இதுவரை இந்த அதிர்வுகள் 60 முறை ஒற்றை அதிர்வுகளாக காணப்பட்டுள்ளன. ஆனால், ஒரே ஒருமுறை இந்த அதிர்வு திரும்பத் திரும்ப நிகழும் மீளதிர்வாகப் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய மீளதிர்வுதான் தற்போது இரண்டாவது முறையாக கனடா நாட்டு சைம் (CHIME) வான் நோக்கியகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மீளதிர்வு சிக்னல்கள் ஏதோ ஒரு இயற்கை புலப்பாடு மூலம் உருவாவது என்று சில விஞ்ஞானிகள் கருதினாலும், வேறு சிலரோ, வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளால் இது தோன்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால், டாக்டர் ஸ்டேர்ஸ் இதற்கு சாத்தியம் குறைவு என்கிறார்.

“இந்த சிக்னல்கள் விண்வெளியில் வேறுபட்ட தொலைவுகளில் இருந்து நீண்ட பயணம் செய்து வருகிறவை. இவற்றில் ஒவ்வொரு சிக்னலும் வெவ்வேறு நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரக்கூடியவை” என்று பிபிசியிடம் கூறுகிறார் ஸ்டேர்ஸ்.

பரந்த விண்வெளியில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து, இதுபோல ஒரே விதமான சிக்னல்கள் வருவது சாத்தியமில்லை. எனவே, இந்த சிக்னல்கள் வேற்றுக்கிரகவாசிகளால் உருவாகியிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கிறார் ஸ்டேர்ஸ்.