நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன.

பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.

24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது.

“40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது ஐரோப்பாவில் நவீன மனிதர்கள் தோன்றி காலமாகும்,” என்று இந்த ஆய்வை வழிநடத்திய சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விரினா ஷுனேமன் கூறியுள்ளார்.

குகைக் கரடி இனம் அழிந்து போவதற்கு மனிதர்கள் முக்கிய பங்காற்றி இருக்கலாம் என்பதற்கு இது மிகவும் தெளிவான சான்றாக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.