நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராம பகுதிகளில் உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருமருகல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்லை கும்பகோணம் நாகை சாலையில் நெல்மணிகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் விவசாயிகள் மண்ணெண்னை கேனை எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

மண்ணெண்ணை கேனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் திறப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.