‘ஃபார்ச்சூன்’ எனும் கணினி விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை சேர்ந்த சிறுவனுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக, இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தமாக முப்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடைபெற்ற இந்த போட்டியின் தனிநபர் பிரிவில் வெற்றிபெற்ற 16 வயதான கைல் கியர்ஸ்டோர்ஃப் எனும் சிறுவனுக்குதான் அதிகபட்ச பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த லண்டனை சேர்ந்த 15 வயதான ஜாடென் அஷ்மான் எனும் சிறுவனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் தனிநபர் பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன், கைல் முகம் நிறைய சிரிப்புடன், தலையை அசைத்தவாறே கூட்டத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.