அல்லும் பகலும்
அயராது போராடி
அடிமை விலங்கினை
அறுத்தெறிந்து
விடுதலை போராளிகள்
பெற்றுத்தந்த உன்னத சுதந்திரம்…!

ஆதிக்க வெறியர்களின்
ஆட்சியை வீழ்த்தி
அகிம்சை வழியிலும்
வீரதீர வழியிலும் அச்சமின்றி
போராடி பெற்றுத்தந்த வீர சுதந்திரம்…!

இன்னுயிர்கள் பல இழந்து
இன்னல்கள் பல தாங்கி
அச்சுறுத்தல்கள் பல பொறுத்து
சிறை வாசங்கள் பல வாழ்ந்து
பெற்றுத்தந்த இனிமையான சுதந்திரம்…!

ஈன்றவளுக்கும் மேலாக
பாரத தாயை போற்றி
இடிபோல் அடிகளை தாங்கி
மாடுகள்போல் செக்கிழுத்து
குருதி வியர்வை சிந்தி
வீர மறவர்கள் பெற்று தந்த வீரதீர சுதந்திரம்…!

உத்தமர்கள் ஒன்றுகூடி
விடுதலை கனல் பறக்கும் கவிகள் பல பாடி
மக்கள் மனதிலே எழுட்சியை வளர்த்து
வெள்ளையனை விரட்டி
வெற்றிக்கொடிக்கட்டி வாங்கிய உயர்ந்த சுதந்திரம்…!

ஊக்கமிழக்காமல் உதிரம் சிந்தி
போராட்டங்கள் பல செய்து
இயக்கங்கள் பல உருவாக்கி
உண்ணாநோன்புகள் பல இருந்து
வெள்ளையனின் குண்டுகளை நெஞ்சில் தாங்கி
மகான்கள் பெற்று தந்த வெற்றி சுதந்திரம்…!

எண்ணற்ற தியாகிகள் எண்ணிலடங்கா தியாகங்கள்
தன்னலமில்லா பசி தாகம் பார்க்கா
தாய்நாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறிய
வீழ்ந்து விடுவோம் என எண்ணினாயா என்று
ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி
வீறுநடை போட்டு வாங்கிய உயரிய சுதந்திரம்…!

ஏடுகள் பல நடத்தி
ஏட்டுக்குள்ளே சுதந்திர உணர்ச்சியை ஊட்டி
ஏளனம் செய்த ஏகாதியபத்ய வெள்ளையனை
வெளியேற்றி வாங்கித்தந்த ஏற்றமிக்க சுதந்திரம்…!

ஐயமில்லாமல் போராடி பெற்ற தார்மிக சுதந்திரம்
ஒற்றுமையுடன் பெற்ற உயர்ந்த சுதந்திரம்
ஓங்கி ஒலிக்க சொல்லுவோம் ஜெய்ஹிந்த்.