வெல்லட்டும் ‘எழுகதமிழ்’ எழுச்சிப் பேரணி
விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை!
~~~~~~~~~~
தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழீழம் உட்பட உலகம் முழுவதும் நடைபெறவிருக்கும் ‘எழுகதமிழ்’ எழுச்சிப் பேரணியின் கோரிக்கைகள் வெற்றிப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘ தமிழர்களின் பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு, மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்; சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்; தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறவேண்டும்; வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும்; இடம்பெயர்ந்த- புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் அனைவரையும் அவரவருக்குரிய பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்த வேண்டும் ’ என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இந்த எழுச்சிப்பேரணியில் பங்கேற்க வேண்டுமென தமிழ்ச்சொந்தங்கள் யாவருக்கும் அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் இம்முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

போர்க்குற்றம் மற்றும் இனக்கொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் பன்னாட்டுப் பொறிமுறை விசாரணை நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறத்தி ஏற்கனவே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம் என்பதைத் தமிழ்ச்சமூகம் நன்கு அறியும். தற்போது அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த எழுச்சிப்பேரணி வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துவதோடு, அதே நாளில் தமிழகத்தில் நடைபெறும் எழுகதமிழ் எழுச்சிப் பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது என அறிவிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறத்தக்க வகையில் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் ஒற்றுமையாகத் திரண்டெழ வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்
விசிக.