தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்ய விரும்புவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் திமுக தலைவர்களிடமும் இருந்து தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணத்தை அடுத்து வேலூரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுவதால் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையும் அந்த செய்தி விவரித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை நேற்றிரவுதான் (திங்கட்கிழமை) ராஷ்டிரபதி பவனுக்கு வந்தததாகவும், தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவரால் நிராகரிக்க முடியாது ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரிடமிருந்து அதிகாரபூர்வ ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்படும் முதல் தொகுதி வேலூர் இருக்கும் என்று மேலும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.