மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனு ஏற்கப்படுமா என்ற ஐயம் நிலவியது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வலு அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது வைகோ-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக-வும், பாமக-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக-வும் ஒப்புக்கொண்டிருந்தன.

தற்போது மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுமே தலா இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. மீதம் இருந்த தலா ஒரு இடத்தை திமுக வைகோ-வுக்கும், அதிமுக பாமக-வுக்கும் ஒதுக்கின.

தமது வேட்பு மனு ஏற்கப்பட்டால் திமுக-வின் மாற்று வேட்பாளர் என்.ஆர். இளங்கோ தமது மனுவை வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார் வைகோ.

எனவே, வைகோ-வின் வேட்புமனுவை ஏற்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற ஒரு ஐயம் நிலவி வந்தது. இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்தபோது, வைகோ மனு ஏற்கப்பட்டுள்ளது.