மும்பை: ஐபிஎல் சீசன் 11ன் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. மும்பையில் நடந்த பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, கேப்டன் கூல் தோனியின் அணி மீண்டும் கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கியது. மொத்தம், 51 நாட்கள், 8 அணிகள், 60 ஆட்டங்கள் என, இந்த சீசன் துவக்கம் முதலே களைகட்டியது.

லீக் சுற்றில் 56 ஆட்டங்கள் முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்றில் ஹைதராபாத்தை வென்று சிஎஸ்கே நேரடியாக பைனல்ஸ் நுழைந்தது. எலிமினேட்டரில் ராஜஸ்தானை வென்ற கொல்கத்தாவை, 2-வது தகுதிச் சுற்றில் வென்று ஹைதராபாத் பைனல்ஸ் முன்னேறியது.

இந்த சீசனையும் சேர்த்து, தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, 7வது முறையாக பைனல்ஸ் முன்னேறி அசத்தியுள்ளது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லத் தயாராக உள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது பைனல்ஸ். 2016ல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பையில் நடக்கும் பைனல்ஸில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் துவக்கிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 5, ஷிகார் தவான் 26, வில்லியம்சன் 47, ஷகிப் அல் ஹசன் 23, தீபக் ஹூடா 3, கார்லோஸ் பிராத்வொயிட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்.

179 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே, 18.3 ஓவர்களிளல் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேன் வாட்சன் சீசனின் இரண்டாவது சதம் அடிக்க, சிஎஸ்கே மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. டுபிளாசி 10, ரெய்னா, 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாட்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்தார். அம்பதி ராயாடு, 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே, 7 முறை பைனல்ஸ் நுழைந்து, மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது.