நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரசிகர்களை கவர்ந்தார் மேகா ஆகாஷ். அவர் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள்.

மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்து ரஷ்ய டிஜே டம்லா என்று பெயரை மாற்றியுள்ளனர். மேலும் மேகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு டம்லாவின் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து அதில் உள்ளவற்றை கண்டுகொள்ள வேண்டாம். கணக்கை திரும்பப் பெறும் முயற்சியில் என் குழு ஈடுபட்டுள்ளது. விரைவில் மீட்கப்படும் என்று மேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹன்சிகாவின் போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் மேகா ஆகாஷும் ஹேக்கர்ஸின் சேட்டையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேகாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு மட்டுமே ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நடிகைகளின் செல்போன்கள், சமூக வலைதள கணக்குகள் அடிக்கடி ஹேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.