ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார்.

செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ’தோல்வியில் முடிந்தது’ என கூறினார்.

ஆனால் இந்த மசோதா முழுவதுமாக திரும்பப்பெறப்பட்டது என அவர் கூறவில்லை. போராட்டக்காரர்கள் மசோதாவைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்திய மசோதா ஏற்கனவே அரசால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“ஆனாலும் மறுபடியும் சட்டசபையில் இதற்கான முயற்சிகளை அரசு தொடருமோ என சிலர் அரசின் மேல் சந்தேகப்படுகின்றனர்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் கேரி லேம்.

“அதனால் நான் மறுபடியும் கூறுகிறேன் அப்படி எதுவும் நடக்காது. அந்த மசோதா செயலிழந்துவிட்டது” என அவர் தெரிவித்தார்.