சீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஹுவாவே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹுவாவே நிறுவனத்துக்கும் டிரம்பின் அமெரிக்க அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. ஹுவாவேவின் தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் தொழில் புரிவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவேவைச் சேர்த்தார் டிரம்ப்.

அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.

ஹுவாவே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை விட அதிக திறன் பேசிகளை உருவாக்கி வந்தது. அடுத்த தலைமுறை 5 ஜி சேவை வழங்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக ஹுவாவே கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தேர்வுக் குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்ள ஹுவாவே நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு தலைவர் ஜான் சுஃபோல்க் அழைக்கப்பட்டிருந்தார்.

ஹுவாவே நிறுவன தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், அந்நிறுவனத்துக்கும் சீன அரசுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

”சீனாவோ அல்லது வேறு அரசுகளோ எங்களிடம் எதையும் எதிர்பார்த்து கேட்கவில்லை” என்றார்.

”வெளியாட்கள் எங்களது தயாரிப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யவும் தொழில்நுட்ப ரீதியாக அல்லது கோடிங்கில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என சோதிப்பதையும் ஹுவாவே வரவேற்கிறது,” எனக் குறிப்பிட்டார்.