விஜய சாந்தி 80, 90களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய ஹீரோயின். கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்குநர் இமயம் பாரதி ராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் விஜயசாந்தி. பின் படிப்படியாக ஹீரோயினாக வளர்ந்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார். கமலுடன் இந்திரன் சந்திரன் படத்திலும் ரஜினியுடன் மன்னன் படத்திலும் இவரது நடிப்பு மறக்க முடியாதது.

விஜய சாந்திதமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கோலோச்சினார். இவர் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்த பெரிய படங்கள் அனைத்தும் பம்பர் ஹிட்டாகின. அதனால் மிகவும் ராசியான நடிகை எனப் புகழப்பெற்றார். இப்போது தனி ஹீரோயினாக கோலோச்சும் நயன்தாரா, அனுஷ்கா ஆகியோருக்கு முன்னோடி விஜய சாந்தி தான். அவர் லேடி அமிதாப் என அன்போடு அழைக்கப்பெற்றவர். இவர் பெண் போலீஸாக, துப்பறியும் படங்களில் நடிக்க ஆரம்பிக்க அப்படங்கள்பம்பர் ஹிட்டாக மாறி பெண்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தனி ஹீரோயினாக தனக்கென தனி மார்க்கெட் வளர்த்து இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் விஜய சாந்தி.

அப்போதைய 90 களின் சினிமாவில் 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே ஆள் அவர்தான். 2006 ல் நாயுடம்மா படத்தில் கடைசியாக சினிமாவில் நடித்தவர் அதன் பிறகுசினிமாவில் இருந்து விலகி அரசியலில் சேர்ந்தார். அரசியலில் ஈடுபட்டு MP யாக பணியாற்றியவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி இருந்த அவர் தற்போது 13 வருடங்கள் கழித்து மகேஷ்பாபு நடிக்கும் “சரிலேறு நீகேவ்வறு” என்ற படத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிக்கும் “சரிலேறு நீகேவ்வறு”படத்தை இயக்குநர் அனில் ரவிபொடி எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேருகிறார். இப்படத்தில் ராணுவ மேஜராக நடிக்கிறார் மகேஷ் பாபு. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இப்போது இப்படத்தில் விஜய சாந்தி இணைந்துள்ளார்.