வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேச அணி அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி சென்ட்ரல் பிரவார்ட் ரீஜினால் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.

முதலில் ஆடிய வங்கதேச அணி சாகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி 74 ரன்களையும், சாகிப் அல் ஹசன் 60 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன் மூலம் வங்கதேச அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிளெட்சர் மற்றும் பவல் தலா 43 ரன்களை எடுத்தனர். வங்கதேச அணியின் முஸ்தாபிஸுர் ரஹ்மான் மற்றும் நஸ்முல் இசுலாம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை தமீம் இக்பால் பெற்றார்.