அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது.

வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும். இந்தக் குழல் ஆராய்ச்சிக்காக 2023-ம் ஆண்டு புவிக்கு வந்து சேரும்.

ரோபோட்டிக் முறையில் இயங்கும் இந்த ஆய்வு வாகனம் திங்கள்கிழமை பென்னுவை நெருங்கிய நிலையில், அதன் உந்து விசை இயக்கப்பட்டது. இதையடுத்து, ஒசிரிஸ்-ரெக்ஸ் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தபட்சம் 7 கி.மீ. தொலைவில் அதன் திசைவேகத்துடன் ஒத்திசைந்து பயணிக்கத் தொடங்கியது.

இந்தப் பணி நடந்தபோது, இந்த ஆய்வு வாகனத்தின் துணை முதன்மை ஆய்வாளரான ஹீத்தர் இனோஸ், இந்த ஆய்வு வாகனத்தை தயாரித்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தார். இந்த அறை, கொலராடோ மாகாணத்தின் லிட்டில்டன் என்ற இடத்தில் உள்ளது.