அம்பாறை, மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16 கொலனி, விகாரைக்கு முன்பாக காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவரும் அவரின் பேத்தியும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (10) மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மத்திய முகாம் வைத்தியசாலையிலும், அம்பாறை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய முகாம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

54 வயதுடைய பெண் ஒருவரும் 6 வயதே ஆன அவரது பேத்தியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று வீடு நோக்கி திரும்பி வந்துக் கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மத்திய முகாம் வைத்தியசாலையிலும் மற்றும் அம்பாறை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.